முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதிய கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த சுஷ்மாஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், பாஜகவில் டெல்லி மாநில சட்டப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.


மோடி, அமித்ஷாவிற்கு நன்றி:


இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பன்சூரி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். 






பன்சூரி ஸ்வராஜ் நியமிக்கப்பட்டது தொடர்பாக பாஜகவின் டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "பன்சூரி ஸ்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அமைப்பு மற்றும் கட்சிக்கான உங்கள் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, நீங்கள் பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மாநிலத்தின் சட்டப் பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும்.


கட்சியின் நலனுக்காக அயராது உழைத்து அமைப்பை மேலும் வலுப்படுத்துவீர்கள் என்று நான் நம்புவது மட்டுமல்லாமல் முழு நம்பிக்கையும் கொண்டுள்ளேன்.” என தெரிவித்திருந்தார். 


டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக பன்சூரி ஸ்வராஜை நியமித்தார்.


யார் இந்த பன்சூரி ஸ்வராஜ்? 



  1. பன்சூரி ஸ்வராஜ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடியுள்ளார்.

  2. கடந்த 2007 ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் சேர்ந்த அவர், வழக்கறிஞர் தொழிலில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

  3. வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற பிறகு, லண்டனில் உள்ள பிபிபி சட்டப் பள்ளியில் சட்டப் படிப்பை முடித்தார்.

  4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் கேத்தரின் கல்லூரியில் முதுகலை படிப்பை முடித்தார்.

  5. பன்சூரியின் தந்தை ஸ்வராஜ் கௌஷால், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மற்றும் மிசோரம் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.


ஆரம்பம் முதலே வாரிசு அரசியலை எதிர்த்து வரும் பாஜக, தற்போது சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜூக்கு டெல்லி பிரிவுக்கு முக்கிய பதவி கொடுத்திருப்பது பெரும் விமர்சனத்தை கிளப்பி வருகிறது.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அவருக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.