காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ”சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது ஜனநாயக நாட்டின் அடிப்படை கூறாகும், இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் வழக்கை கவனித்து வருகிறோம்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தகுதி நீக்கம்:
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி நீரவ்மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்கள் பெயருக்கு பின்னாலும் மோடி இருப்பது ஏன்? என்ற விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு, மோடி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
போராட்டம்:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், பல்வேறு மாநிலங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்னதாக, கேரளாவிலும் கர்நாடகாவிலும் தீ பந்தத்தை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக, ராகுல் காந்திக்கு நேர்ந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து மத்திய பாஜக அரசை ஆட்டம் காண வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு:
நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதோடு, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
'சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படை கூறாகும். இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் வழக்கை கவனித்து வருகிறோம்.
அமெரிக்க, நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுகமான உறவை பேணவே விரும்புகிறது என்றார். "சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை மதிப்பது எந்தவொரு ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இந்திய நீதிமன்றங்களில் ராகுல்காந்தியின் வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் மார்ச் 27 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியாவுடனான ஈடுபாடுகளில், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பது, எங்கள் இரு ஜனநாயகங்களையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம் என வேதாந்த் படேல் தெரிவித்தார்.