அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே நபர் விஸ்வாஷ் குமார் ரமேஷ், தப்பிக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய அதிசயமாக, அவர் உயிர் பிழைத்துள்ளார். விபத்து நடக்கும் பகுதியில் இருந்து அவர் எழுந்து வருவதும், அதன் பின் விமானம் பற்றி எரியும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசயமாக மாறிய ரமேஷ்:

கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், டெக் ஆப் செய்த 40 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். 

இந்த பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே நபர் இந்திய வம்சாவளியான ரமேஷ். விபத்து நடந்த அன்றே இவர் உயிர் பிழைத்து நடந்து வரும் காட்சி வெளியானது. இந்த நிலையில், அவர் உயிர் பிழைத்து வரும் மற்றொரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

தப்பித்தது எப்படி?

அந்த வீடியோவில், இடது கையில் மொபைல் போனுடன் விபத்து நடந்த இடத்திலிருந்து வெள்ளை நிற டி-சர்ட்டில் ரமேஷ் நடந்து வருவதைக் காணலாம். காலில் காயத்துடன் அந்த நபர் நொண்டி நொண்டி நடப்பதை வீடியோவில் பார்க்கலாம். அவரது ஆடைகளில் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. அவரின் பின்னே, விமானம் பற்றி எரிகிறது.

உள்ளூர்வாசிகள் அவரை நோக்கி விரைந்து சென்று, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து தனியே வந்ததாகவும் அவர் அருகில் இருந்த கதவு உடைந்ததால் தன்னால் தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

வெளியான புது வீடியோ:

தனது சீட் பெல்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து உடனே வெளியே வர முடிந்ததாகவும் அவர் கூறினார். விபத்தை தொடர்ந்து, அவர் சாலையில் பதற்றத்துடன் நடந்து வரும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

40 வயதான விஸ்வாஷ் குமார் ரமேஷ், இந்தியாவுக்கு பயணம் செய்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். அப்போதுதான், விபத்தில் சிக்கியுள்ளார்.