நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம் மீண்டும் ஹாங்காங் நாட்டுக்கே திரும்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போயிங் ட்ரீம்லைனர் 787 விமானத்தில் விபத்து
அகமதாபாத்தில் இருந்து, லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானம் ஜூன் 12ஆம் தேதி மதியம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தின் டேக் ஆஃப்பின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவசர கால கதவுக்கு அருகில் இருந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பினார்.
மற்றோர் ஏர் இந்தியா விமானத்தில் விபத்து
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த துயரத்தின் வடு எல்லோரின் மனதை விட்டும் அகலாத நிலையில், மற்றோர் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, ‘’ஏர் இந்தியா AI315 விமானம் ஹாங்காங்கில் இருந்து டெல்லி வருவதாக இருந்தது. போயிங் 787 8 ட்ரீம்லைனரால் இயக்கப்பட்ட இந்த விமானத்தில் நடு வானில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ஹாங்காங் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லடாக் வந்து சேர்ந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரங்களில் புகையும் தீப்பொறியும் காணப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.