அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. விமானம் வெடித்ததில் 241 பயணிகள், விமானம் மோதியதில் 33 பேர் என 274 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்து:
ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தில் தற்போது உயிரிழந்த ஒவ்வொருவர் பற்றியும் வித்தியாசமான சோக கதைகள் வெளியாகி நம்மை மேலும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி நமது இதயத்தை மேலும் துயரத்தில் ஆழ்த்தியவர் அர்ஜுன் பட்டோலியா.
குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் லண்டனில் வசித்து வந்தார். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு 8 வயதிலும், 4 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். மிகவும் நிம்மதியாக லண்டனில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாரதி பாதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டும் குணம் அடையாத பாரதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மனைவியின் கடைசி ஆசை:
லண்டனிலே உயிரிழந்த பாரதி தனது அஸ்தியை குஜராத்தில் உள்ள தனது மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில் கரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். மனைவியின் கடைசி ஆசைப்படி குஜராத் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வாடியா கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியாக வந்துள்ளார் அர்ஜுன்.
36 வயதான அர்ஜுன் அங்கு பாயும் நர்மதை ஆற்றில் தனது மனைவியின் அஸ்தியை அவர்களது பாரம்பரிய சடங்குப்படி கரைத்துள்ளார். அஸ்தியை கரைத்த அர்ஜுன் மீண்டும் கடந்த 12ம் தேதி லண்டனில் உள்ள தனது இரு மகள்களுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க லண்டனுக்கு திரும்பியுள்ளார்.
அஸ்தியை கரைக்க வந்த கணவனும் மரணம்:
அர்ஜுன் மற்றும் பாரதியின் குடும்பத்தினர் லண்டன் திரும்பிய பிறகு தனது மகள்களுடன் புதிய வாழ்க்கையை அர்ஜுன் தொடங்குவார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அகமதாபாத்தில் இருந்து லண்டன் திரும்பிய அந்த ஏர் இந்தியா போயிங் 171 விமானம் புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.
விமானம் வெடித்து சிதறியதில் உடல் கருதி அர்ஜுனும் உயிரிழந்தார். மனைவியின் அஸ்தியை கரைத்து விட்டு மீண்டும் லண்டன் திரும்பிய இளம் கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அர்ஜுன் மற்றும் பாரதியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெரும் துயரம்:
இரண்டு வாரங்களுக்கு முன்பு அம்மாவை இழந்த நிலையில், தற்போது அப்பாவையும் இழந்த அர்ஜுனின் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது லண்டனில் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர். தனது தந்தைக்கு இறுதி்ச்சடங்கு செய்ய அந்த குழந்தைகளை அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.