கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


மாநில அமைச்சர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்:


அதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கவனமாக இருக்கும்படி மாநில அரசுகளை மத்திய அமைச்சர் மாண்டவியா அறிவுறுத்தினார். அதேபோல, கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மாநில அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இந்த கூட்டத்தில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், முதன்மை மற்றும் கூடுதல் தலைமை செயலாளர்கள் ஆகியோர் இணையம் வழியாக கலந்து கொண்டனர். குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், கடுமையான சுவாச பிரச்னையால் அவதிப்படுவோர் ஆகியோர் வசிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மருத்துவமனை உள்கட்டமைப்பு:


அதேபோல, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி, மருத்துவமனை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாநில அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை எடுத்து மரபணு வரிசைமுறைக்கு உட்படுத்தவும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.


ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "முந்தைய கொரோனா அலைகளின்போது மத்திய, மாநில அரசுகள் எப்படி இணைந்து செயல்பட்டதோ அதேபோல தற்போது ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்" என்றார்.


பயிற்சி ஒத்திகை:


அதேபோல, நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில், பயிற்சி ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த பல வாரங்களாகவே, சில மாநிலங்களில் கொரோனா சோதனை குறைவாக நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை ஒப்பிடும்போது தற்போதைய சோதனை அளவுகள் போதுமானதாக இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.