குஜராத் மாநிலம் சூரத் நகரத்திற்குள் தீபாவளி பண்டிகை முடிந்து வந்தவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள திரளாக மக்கள் வந்துள்ளனர். 


தீபாவளி பண்டிகை முடிந்து, சூரத் நகரத்திற்குள் சாலை, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், விமான நிலையம் ஆகிய மார்க்கங்களின் மூலமாக நுழைந்த 3100 பயணிகள் கடந்த இரண்டு நாள்களாகக் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 3100 பேர்களுள் ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றும் சுகாதாரத்துறையினரால் ரேபிட் பரிசோதனைகளும், ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகளும் நகரத்திற்குள் நுழையும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. 



கோவிட் பரிசோதனை


 


கடந்த 10 நாள்களுக்கு முன்பு, சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் தீபாவளி பண்டிகையை ஒட்டி, வெளியூருக்குச் செல்பவர்கள் மீண்டும் ந்கருக்குள் நுழையும் போது, 72 மணி நேரங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவுகளோடு நுழைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது. கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகள் செலுத்தி இருந்தாலும், அவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டு இருந்தது. சூரத் மாநகரத்திற்குள் பணியாற்றும் பலரும் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளிகள். சூரத்தில் உள்ள வைரம், பின்னலாடை முதலான தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமான ஒன்று.


எனினும், மீண்டும் சூரத் நகரத்திற்குள் நுழைந்தோரின் பரிசோதனை முடிவுகள் எதுவும் சோதிக்கப்படாமல், நகரத்திற்குள் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவுகளை எடுத்து வராதவர்கள் சூரத் நகரத்திற்குள் நுழையும் போதே பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 



தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்கள்


 


`சூரத் நகரத்திற்குள் நுழையும் வெவ்வேறு இடங்களில் தனிநபர்கள் பலரையும் கண்டறிந்து, அவர்களுள் 3100 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அவர்களுள் ஒருவர் கூட கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகவில்லை என இதுவரை வந்துள்ள தகவல்கள் காட்டுகின்றன’ என்று சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். 


இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து சூரத் நகருக்குள் நுழைந்த மக்கள் பலரும் திரளாக சென்று கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொண்டனர். 


கடந்த அக்டோபர் மாதம், சூரத் நகரத்திற்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், `100 சதவிகிதத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநகரம்’ என்று அறிவித்துக் கொண்டது. எனினும், முன்களப் பணியாளர்களுள் 15 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகின.