வீட்டு உபயோகப் பொருட்களை நாம் இஎம்ஐ எனப்படும் சுலப மாதாந்திர தவணையில் வாங்கியிருப்போம் ஆனால் விமான டிக்கெட்டை இஎம்ஐயில் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த இஎம்ஐ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
அவசரமாக வெளியூர் செல்ல நினைக்கும் உங்களிடம் விமான டிக்கெட்டை எடுக்கும் அளவுக்கு பணம் இல்லாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நீங்கள் இஎம்ஐயில் டிக்கெட் புக் செய்யலாம். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம் எனக் கூறப்படுகிறது.
எப்படி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவது?
எப்படி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் வேண்டாம். ஸ்பைஸ்ஜெட் இணையதள பக்கத்தில் உள்ள walnut 369 செயலி மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விமானத்தில் பயணம் செய்யலாம்.
விமான பயணத்திற்கு பின்பு விமான கட்டணத்தை 3,6, 9 அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம். தவணை முறையில் விமான பயணச் சீட்டு வாங்குபவர் வருவாய் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களைக் குறிப்பிட்டால் பயணச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் பின்னணி:
ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமான சேவை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் நான்காவது பெரிய விமான சேவை வழங்கும் நிறுவனமாகவும் அறியப்படுகிறது.
ஸ்பைஸ் ஜெட்டின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை இணைகின்றது. ஸ்பைஸ்ஜெட்டின் சர்வதேச சேவைகள் காத்மாண்டு, கொழும்பு, மாலத்தீவு, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களை இணைக்கின்றது.
அதாவது 34 இந்திய நகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகரங்களுக்குத் தினமும் 273 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.
2015 ஆம் ஆண்டு, வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக டெல்லியிலிருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவிற்கு விமான சேவை இயக்கப்பட்டது.
அஜய் சிங் டூ கலாநிதி அண்ட் பேக் டூ அஜய் சிங்:
இந்த நிறுவனம் அஜய் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இதனுடைய பங்குகளை சன் குழுமத்தை சார்ந்த கலாநிதி மாறன் 2010 ஆம் ஆண்டு வாங்கினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய் சிங்கிற்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைக்கே கலாநிதி மாறன் கைமாற்றினார்.