முப்படைகளில் ஷார்ட் சர்வீஸ் அடிப்படையில் சேரும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?
அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். அதன்பிறகு, ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம்.
ஆனால் இது வீரர்கள் மத்தியில் போராடும் குணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துணிந்து செயல்படுவதை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு தங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என எதிர்த்தனர். 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள்.
ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும் என்று இளைஞர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.
இந்தக் குமுறல்களோடு மிகப்பெரிய போராட்டஙக்ள் நாடு முழுவதும் நடைபெற்றது. பீகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கினர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.
அரசு சொன்ன காரணம்:
இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று, இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது, நியாயம் அற்ற தேர்வு முறை; இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முப்படைகளில் ஷார்ட் சர்வீஸ் அடிப்படையில் சேரும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் நாளை விசாரணைக்கு வருகிறது.