தற்பொழுது நடைமுறையில் இருந்து வரும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தேர்வுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன அரசியல் கட்சிகள். தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள். நீட் தேர்வு கடுமையான வழிமுறைகளுடன் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, முழுக்கை சட்டை அணியக் கூடாது; பட்டன் வைத்த உடை அணியக் கூடாது; தலைமுடியில் ஹேர் கிளிப்ஸ் உபயோகிக்க கூடாது; உலோகங்களால் ஆன எந்த பொருட்களும் அணியக்கூடாது எனப் பல வகையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்றைய தினம் ஜூலை 18, 2022 நடைபெற்றது. எந்த வருடம் தான் நீட் தேர்வினால் பிரச்சினை ஏற்படவில்லை இந்த வருடம் மட்டும் விதிவிலக்கா என்ன என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


உள்ளாடையை அகற்ற கூறிய அவலம் :




கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவி ஒருவரின்  உள்ளாடையை அகற்றக் கூறி வற்புறுத்தி இருக்கின்றனர்  ஆசிரியர்கள். உள்ளாடையில் உலோக ஹுக் இருக்கின்றதால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அம்மாணவியை தடுத்துள்ளனர். பல மாதங்களாக கஷ்டப்பட்டு படித்தும் இது போன்ற தொல்லையால், மனரீதியாக பாதிக்கப்பட்ட என் மகள் சரியாக தேர்வு எழுதவில்லை. மேலும் அவர் அழுது கொண்டே தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தார் என்று  மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் :




2017 ஆம் ஆண்டு முதன் முதலில் நீட் தேர்வு நடைபெற்ற பொழுது இதே சம்பவம் கேரளாவில் நடந்தது. தேர்வு எழுத சென்ற மாணவி ஒருவரின் உள்ளாடையை கழற்ற சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சையினால் நான்கு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலானது. உள்ளாடையை அகற்ற கூறிய சம்பவத்திற்கு கேரள சட்டமன்றம் அப்போதே கண்டனம் தெரிவித்தது. தற்போது மீண்டும் அதே சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.


ஏற்கனவே இதே சம்பவம் சர்ச்சைக்கு உள்ளாகி அது தவறு என்று தண்டனையும் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அது தொடர்வது அதிர்ச்சி அளித்துள்ளது. நீட் தேர்வினால் மாணவர்களும் பெற்றோர்களும் ஏற்கனவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் இப்படிப்பட்ட பல இன்னல்களை மாணவர்கள் சந்திக்க நேர்வது கண்டனத்துக்குரியது. பாடத்திட்டத்தில் குழப்பம், மொழி குழப்பம், தேர்வு மையங்களில் குழப்பம், உடை கட்டுப்பாடுகளில் குழப்பம், என குழப்பத்திற்கு பெயர் போன நீட் தேர்வு என்ற குழப்பம் தீருமா என்று மாணவர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.