கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது.


ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி தரும் ED: நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. 7 முறை சம்மன் அனுப்பப்பட்ட பிறகும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.


நிலக்கரி சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சர் பதவியை சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி 31ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோரன் கைது செய்யப்பட்டார்.


தொடர் சட்ட போராட்டத்திற்கு பிறகு, கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி, ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம். சோரனுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தின் அதிரடி முடிவு: இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை இன்று உறுதி செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற விசாரணையின்போது, "அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் இதேபோன்ற குற்றத்தைச் செய்யக்கூடும்" என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.


இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டதாக சோரன் தரப்பு வழக்கறிஞர் வாதம் மேற்கொண்டார். இரு தரப்பு வாதத்தை கேட்ட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய், "பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோரன் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன" என்றார்.


ஆவணங்களை போலியாக தயாரித்து, முறைகேடாக நிலம் கையகப்படுத்துவதை தங்களின் நடவடிக்கை தடுத்தது என கூறிய அமலாக்கத்துறையின் வாதம் சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் நீதிபதி தெரிவித்திருந்தார்.