Indian Passport: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


இந்திய பாஸ்போர்ட்:


வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் என்பது மிக முக்கிய மற்றும் அத்தியாவசியமான ஆவணமாகும். உங்கள் பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன என்பதை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது மட்டுமே உணர முடியும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பாஸ்போர்ட் வேகமாக வலுப்பெற்று வருகிறது. அதன் பலத்தை உணர்ந்து 58 நாடுகள் நமது குடிமக்களுக்கான விசா தேவையை ரத்து செய்துள்ளன. இந்திய குடிமக்கள் இந்த நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் எளிதாக பயணங்களை மேற்கொள்ளலாம். 


உலக அளவில் 82வது இடத்தில் இந்திய பாஸ்போர்ட்:


ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2024 அறிக்கையின்படி, இந்திய பாஸ்போர்ட் உலகில் 82வது இடத்தில் உள்ளது. சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டின் உதவியுடன், விசா பெறுவதில் சிக்கல்களை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள். இது உங்களுக்கு உலகத்தை சுற்றி வர அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் 58 நாடுகளுக்கு, விசாவே இன்றி பயணம் மேற்கொள்ளலாம். ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா, செனகல் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.  அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டானுடன், ஆசியா மற்றும் ஓசியானியாவின் பல நாடுகளுக்கும் இந்தியர்கள் விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம். இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட சில அண்டை நாடுகளில், அங்கு தரையிறங்கியதும் இந்தியர்கள் விசா பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. வலுவான பாஸ்போர்டை கொண்ட நாடுகளின் பட்டியலில், அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது.


இந்தியர்கள் அதிகம் பயணம் செய்யும் 10 நாடுகள்:



  • ஐக்கிய அரபு நாடுகள்

  • அமெரிக்கா

  • தாய்லாந்து

  • சிங்கப்பூர்

  • மலேசியா

  • இங்கிலாந்து

  • ஆஸ்திரேலியா

  • கனடா

  • சவூதி அரேபியா

  • நேபாளம்


உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் - சிங்கப்பூர்:


ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்த சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்தின் (IATA) தரவைப் பயன்படுத்துகிறது. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள குடிமக்கள் விசா இல்லாமல் 195 நாடுகளுக்குள் நுழைய முடியும். இந்தப் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அது உலகிலேயே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


2024 ஆம் ஆண்டிற்கான மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்:




  1. சிங்கப்பூர் (195 இடங்கள்)

  2. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் (192)

  3. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் (191)

  4. பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து (190)

  5. ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் (189)

  6. கிரீஸ், போலந்து (188)

  7. கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா (187)

  8. அமெரிக்கா (186)

  9. எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185)

  10. ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா (184)