SC President: குடியரசு தலைவர் மனு மீதான விசாரணையை நடத்திய, தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை வழங்க உள்ளது. 

Continues below advertisement


உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் முடிவில் ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவரும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதையடுத்து குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களில் செயல்படுவதற்கான காலக்கெடுவை நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியுமா? என 14 கேள்விகள் அடங்கிய மனு குடியரசு தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் கேள்வி எழுப்பி நீதிமன்றம் தனது ஆலோசனைகளை வழங்கும் இந்த அரிய நிகழ்வானது, அதிகாரப் பிரிப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



நீதிமன்றம் தந்த தீர்ப்பு என்ன?


தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிவில், சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத காலக்கெடுவையும், குடியரசு தலைவருக்கு மூன்று மாத கால அவகாசத்தையும் நிர்ணயித்தது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 மசோதாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, அரசியலமைப்புச் சட்டம் 142 வது பிரிவையும் பயன்படுத்தி அறிவித்தது. இது தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆளுநர்களை வைத்து அரசியல் செய்யும் மத்திய அரசுக்கு இது ஒரு சவுக்கடி என தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தெரிவித்தனர்.


குடியரசு தலைவரின் கேள்விகள்


இதையடுத்து காலக்கெடு நிர்ணயித்திற்கு எதிராக குடியரசு தலைவர் 14 கேள்விகள் அடங்கிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 




  • இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன?

  • இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, ​​தன்னிடம் உள்ள அனைத்து விருப்பங்களையும் பயன்படுத்தி, அமைச்சரவை வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

  • இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

  • இந்திய அரசியலமைப்பின் 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா? உள்ளிட்ட கேள்விகள் அடங்கியிருந்தன


5 நீதிபதிகள் கொண்ட அமர்வு:


குடியரசு தலைவர் மனு மீது, தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்ம மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீண்ட நெடிய விசாரணையை தொடங்கியது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தன. அதேநேரம், பாஜக ஆளும் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நீதித்துறையால் உருவாக்கப்பட்ட காலக்கெடு அரசியலமைப்பு நெருக்கடிகளைத் தூண்டக்கூடும் என்று குடியரசு தலைவர் சார்பில் வாதிடப்பட்டது.  10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் செப்டம்பர் 11ம் தேதி அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 23ம் தேதியுடன் தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று குடியரசு தலைவரின் மனு மீது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது. இதில் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு செல்லுமா? செல்லாதா? என்பது இறுதி செய்யப்பட உள்ளது.