கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மண்டல பூஜை தொடங்கும். இந்த நிலையில் கார்த்திகை நாளிலேயே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பாதயாத்திரையாக சபரிமலை செல்கின்றனர். இதன்படி கார்த்திகை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிவிட்டார்கள்.

Continues below advertisement

சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு சென்று, அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இந்த பாதைதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எரிமேலியில் இருந்து சபரிமலைக்கு பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நடந்து வர செல்வர்.

Continues below advertisement

இந்த இரண்டு பாதையை தாண்டி, மற்ற இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கமாகும். அதன்படி  சத்திரம், புல்லுமேடு மலைப்பாதைகள் திறக்கப்பட்டது.

கோயிலுக்கு செல்லும் நுழைவு வாசல் முன்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஐயப்ப பக்தர்கள் மலைப்பாதைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் 788 ஐய்யப்ப பக்தர்கள் இந்த 2 பாதைகள் வழியாக சபரிமலைக்கு சென்றனர். சத்திரம், புல்லுமேடு பாதைகள் வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடங்கியுள்ள நிலையில்,

இந்த பாதைகள் வழியாக பாதயாத்திரை எந்தெந்த நேரங்களில் செல்லலாம் என்பதை பார்க்கலாம். அதன்படி, சத்திரம் பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும். அதேபோல் புல்லுமேடு பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.

மேலும் சபரிமலையில் இருந்து சத்திரம் வழியாக திரும்பி வரும் பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பாதைகளில் வருபவர்கள் அடர்ந்த காட்டுப்பாதையில் நடந்து வர வேண்டும். அதேநேரம் பாதை மிக எளிதாக இருக்கும். நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கே வர முடியும். சுமார் 80 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லாமல் குமுளி வண்டி பெரியாரில் இருந்தே எளிதாக வர முடியும்.

பொதுவாக குமுளியிலிருந்து சபரிமலை செல்ல 2 பாதைகள் உள்ளது. குட்டிகானம், முண்டகாயம், பம்பை வழியாக 129 கி.மீ. தூரம் வாகனத்தில் சென்று, 6 கி.மீ. தூரம் மலைப் பாதையில் நடந்து சென்று சன்னிதானத்தை அடைய முடியும். அதேபோல் குமுளியிலிருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு, கோழிகானல், புல்மேடு வழியாக 33 கி.மீ. சென்று, 6 கி.மீ. பள்ளத்தில் இறங்கினால் சன்னிதானத்தையே அடையலாம். இந்தப் பாதையில் செல்லும்போது தூரமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகமானோர் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது.