மத்திய அரசு - கொலீஜியம் இடையே மோதல் போக்கு:
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக கிரண் ரிஜிஜு, மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நான்கு நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை:
இந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நான்கு நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் பிரபலமான வழக்கை கையாண்டவர்கள்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதியையும், ஜாமீன் கேட்டு சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கிய நீதிபதியையும் இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 3ஆம் தேதி நடந்த கொலீஜியம் கூட்டத்தில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி ஏ.ஒய். கோக்ஜேவை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி கீதா கோபியை மாற்ற பரிந்துரை செய்துள்ளது.
பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி சமீர் தவேவும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு நீதிபதிகளில், மூவர் வழக்கறிஞராக இருந்த நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டவர்கள். நீதிபதி கோபி மட்டும் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட கோபி, இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர். இந்தாண்டு ஏப்ரல் மாதம், ராகுல் காந்தி வழக்கை இவர்தான் விசாரிப்பதாக இருந்தது. ஆனால், வழக்கை விசாரிப்பதில் இருந்து இவர், திடீரென விலகினார். இதை தொடர்ந்து, நீதிபதி பிரச்சக் அமர்வுக்கு, ராகுல் காந்தி வழக்கு மாற்றப்பட்டது. இவர்கள், இருவரும் தற்போது வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஜாமீன் கேட்டு சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிய நீதிபதி தவேவை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிதுரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.