டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு, மீண்டும் கோவிட் தொற்று முதலான விவகாரங்களைச் சமாளிக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது. 


டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள அதீத காற்று மாசு குறித்து தீவிரம் காட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வின் நீதிபதிகளான தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யா காந்த் ஆகியோர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் டெல்லி - தேசியத் தலைநகர்ப் பகுதியின் காற்றின் தன்மையை மேம்படுத்துவதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 2 அன்று நீதிமன்ற அமர்வு நடைபெறும் எனக் கூறியுள்ள நீதிமன்ற சிறப்பு அமர்வு, மாநில அரசுகள் தங்கள் பதில்களை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. 


மாநில அரசுகள் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை விதித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில், காற்று மாசைக் குறைப்பதற்காக பணிக்குழு உருவாக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு குறிப்பிட்டுள்ளது. 



புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான செண்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் தூசியால் காற்று மாசு மேலும் கூடுகிறதா என மத்திய அரசிடமும் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்றம் செண்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளால் ஏற்படும் காற்று மாசைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 


`டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அது செண்ட்ரல் விஸ்டாவாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களை எதுவும் தெரியாது என்று எண்ணாதீர்கள். கவனத்தைத் திருப்ப முயற்சி செய்யாதீர்கள். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எங்களுக்குப் பதில் தர வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தொடர்ந்து, `மத்திய அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் காற்று மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் வைரஸ் ஏற்படுத்தும் ஆபத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. இன்றும் காற்றின் தன்மை மிக மோசமாக மாசடைந்து இருக்கிறது. நாம் இதனையும், வைரஸ் தொற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 



டெல்லியில் தொலைநோக்குப் பார்வையோடு மரங்கள் நடுவதற்கான திட்டங்களை வகுக்குமாறு டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த 12 வாரங்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ திட்டத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டுவது குறித்து மத்திய கானுயிர்ப் பாதுகாவலரிடம் அனுமதி பெறுமாறும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.