பாலியல் வன்கொடுமையை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் இரு விரல் பரிசோதனை ஆணாதிக்கமானது என்றும் பாகுபாடு மிக்கது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பதை மத்திய, மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பெண்ணின் பாலியல் உறவு தொடர்பான விவரங்களை கண்டறிய இந்த பரிசோதனை சரியானது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களை இது மேலும் உணர்வுப்பூர்வமாக பாதிக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக கூறுகையில், "பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை மேற்கொள்ளும் பட்சத்தில் அதை மேற்கொள்பவர்கள் தவறான நடத்தைக்காக குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன் என பாலியல் உறவில் தொடர்ந்து ஈடுபடும் பெண் கூறுவதை நம்பாமல் இருப்பது ஆணாதிக்க மனோபாவமே ஆகும். பாகுபாடு மிக்கது. இன்று வரை இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வருத்தம் அளிக்கிறது" என தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவை வழங்குனர்களுக்கான பயிலரங்குகளை நடத்தவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை பரிசோதிப்பதற்கான தகுந்த நடைமுறையை தெரிவிக்கவும் உச்ச நீதிமன்றம் சுகாதாரத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது.
இந்தாண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இரு விரல் சோதனைக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இரு விரல் பரிசோதனை பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறுவதாக உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம், இதை சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2013ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.