இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின்  பிறந்த நாளை முன்னிட்டு  அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்தவர்.சுதந்தர இந்தியா, பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும் கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான ராஜ்ஜியங்களாகச் சிதறிக் கிடந்தன. இப்படி தனித்தனியாகப் பிரிந்திருந்த ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாளான இன்று  (அக்டோபர் 31 ) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. 


 






இன்று வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டுஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் அவரது நினைவாக வைக்கப்பட்டுள்ள  597 அடி சிலைக்கு பிரதமர் மோடி  நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ள சிலைதான் உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலையை ஒற்றுமையின் சின்னம் என அழைக்கின்றனர்.வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் குஜராத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 







இதே போல மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவுக்கூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “சர்தார் படேலின் இரும்பு நோக்கங்களுக்கு எதிராக எதுவும் சாத்தியமில்லை. தனது உறுதியான தலைமைத்துவத்தால், பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை ஒற்றுமை என்ற நூலில் ஒன்றிணைத்தார். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும் தேச நலனுக்காகவும்  வாழ்ந்த சர்தார் படேலின் பிறந்தநாளில், அவரது காலடியில் வணக்கம் செலுத்துவதுடன், அனைவருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார். மேலும் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்திய குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு  , துணை  குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மற்றும் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட தலைவர்களும்  சர்தார் வல்லபாய் பட்டேலின்  பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.