கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்தாண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அப்போதைய பாஜக அரசு தடை விதித்தது. மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக முழுவதும் போராட்டம் வெடித்தது.
ஹிஜாப் விவகாரம்: இதற்கிடையே, இஸ்லாமிய மாணவிகள் சிலர், ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். எனவே, இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் புர்கா அணியவும் ஹிஜாப் அணியவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 9 மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பிவி சஞ்சய் குமார் ஆகியோர் இன்று அதிரடி கருத்தை தெரிவித்துள்ளனர். ஹஜிாப்-க்கு தடை வதித்த கல்லூரியை கடுமையாக சாடிய நீதிபதிகள், "சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது" என தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? இதுகுறித்து விரிவாக பேசிய நீதிபதிகள், "பெண்கள் என்ன அணிய வேண்டும? என்ன அணியக்கூடாது? என நீங்கள் முடிவு செய்தால் அவர்களை எப்படி முன்னேற்ற முடியும்?" என கேள்வி எழுப்பினார்கள்.
புர்கா, ஹிஜாப், நிகாப், தொப்பி, ஸ்டோல். பேட்ஜ் ஆகியவற்றை அணிய தடை விதித்த என்.ஜி. ஆச்சார்யா & டி.கே. மராத்தே கல்லூரியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், "மனுதாரர்களை ஹிஜாப் மற்றும் பர்தா அணிய அனுமதித்தால், மற்ற மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்து அரசியல் பேசுவார்கள். அது நடக்க விரும்பவில்லை" என வாதிட்டனர்.
இதற்கு நீதிபதிகள், "பொட்டு அல்லது திலகம் அணிய பெண்களுக்கு தடை விதிப்பீர்களா?" என கேள்வி எழுப்பினர்.