Anura Kumara Dissanayake: அனுரா குமார திசநாயகேவின், இந்தியா மீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


அதிபராக பொறுப்பேற்ற அனுரா குமார திசநாயகே


பரபரப்பாக நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். அதைதொடர்ந்து, இன்று அவருக்கு கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில்,  இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா பதவிப்பிரமணம் செய்து வைத்தார். மக்களால் ஏகேடி என அறியப்படும் அனுரா குமார திசநாயகே, இலங்கையின் முதல் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றும் அதிபராவார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள அவர் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஏகேடி-யின் ஆட்சிக்காலத்தில், இந்தியா - இலங்கை இடையேயான உறவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .


இலங்கையின் புவிசார் முக்கியத்துவம்:


இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் இருப்பிடம், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது, குறிப்பாக இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு விரிவடைவதற்கு முக்கிய தளமாகவும் பார்க்கப்படுகிறது. இலங்கை உடன் நெருங்கிய உறவை மேற்கொள்ள இந்தியா முயன்றாலும், சீனா இலங்கையின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது. 2006 முதல் 2022 வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 11.2 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது.


இதனிடையே, இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்று, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து உள்ளது. இந்த நடவடிக்கை துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை  இந்தியாவிற்கு எழுப்பியுள்ளது, . 


ஏகேடி சீனாவிற்கு ஆதரவா?


இத்தகைய சூழலில் இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள திசநாயகே, தன்ன்னுடன் ஒத்துப்போகும் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றும் சீனா உடன் நெருங்கி பழகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ”இந்தியா எங்களது அண்டை நாடு மற்றும் சக்தி வாய்ந்த நாடும் ஆகும். இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வல்லரசுகளுடனும் நல்ல உறவை தொடர ஏகேடி விரும்புகிறார்” என அவரது ஜெவிபி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏகேடி-யின் நிலைப்பாடு:


ஜெவிபி கட்சி கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக வெளிப்படுத்தினாலும், தற்போதைய சூழலில் ஏகேடி இந்தியா உடன் நெருக்கம் காட்டவே விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உணர்த்தும் விதமாகவே கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், வேறு ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த, எங்களது வான் மற்றும் தரை பரப்பை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என ஏகேடி தெரிவித்து இருந்தார். மேலும், தனித்து இருந்தால் இலங்கையால் ஸ்திரத்தன்மையை பெற முடியாது என்றும்,  இந்தியா போன்ற வலிமையான நாட்டிடம் இருந்து தொழில்நுட்பம் போன்ற பல நன்மைகளை பெற முடியும் என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த கால அரசியல் நிலைப்பாட்டை தாண்டி நாட்டை நிலைப்படுத்த, இந்தியாவுடன் நெருங்கி பழக விரும்புவதாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.


அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு:


இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டம், நாட்டின் ஆற்றல் இறையாண்மையை மீறுவதாகவும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள எழுப்புவதாகவும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். இதேபோன்று, ஹம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் போன்ற சில சீன முதன்மைத் திட்டங்களை நிறைவேற்றுவதில், ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என திசநாயகே கவலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.