அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக ஆய்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.


பங்கு சந்தையில் மோசடி செய்ததா அதானி குழுமம்?


ஆனால், ஆய்வறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி குழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர். 


இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டி பலர் பொது நல வழக்கை தொடர்ந்தனர். கடந்த மார்ச் 2ஆம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது.


அதேபோல, இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய பங்கு சந்தையின் முதலீட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய நிபணர் குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது.


உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்:


இந்த நிலையில், இன்றைய விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "இந்த விவகாரத்தில் செபியின் நடத்தை நம்பகமானதாக இல்லை" என வாதிட்டார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நீதிபதிகள், "செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எதிரான புகாரில் செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது" என தெரிவித்தனர்.


தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆவணங்கள் கிடைக்கிறது என்றால், செபிக்கு எப்படி அது கிடைக்காமல் இருக்கும்? இந்த நிதி, வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது? இத்தனை ஆண்டுகளாக இந்த ஆவணங்களை எப்படி அவர்களால் பெற முடியவில்லை?


தீர்ப்பு ஒத்திவைப்பு:


அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், விநோத் அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஓசிசிஆர்பி, தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது" என்றார்.


இதற்கு பதில் அளித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இதுபோன்று, செய்தித்தாள்களில் வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே நிறுவனங்களுக்கு எதிராக செபி நடவடிக்கை எடுக்க முடியாது" என்றார். இறுதியில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.