ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.


எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


புல்லட் ரயில் திட்டம்:


இதை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் பெரிய மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் செல்லும் வகையில் 100 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகளும் 230 கிமீ தூரத்துக்கு தூண் அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாலத்தின் மீதுதான் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 


எஃப்எஸ்எல்எம் தொழில்நுட்பம் மூலம் பாலம் அமைக்கும் பணிகளும் தூண்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது. வழக்கமாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் 10 மடங்கு வேகமாக இந்த பணிகள் நிறைவுபெற்றுள்ளது.


செம்ம அப்டேட் கொடுத்த ரயில்வே அமைச்சர்:


மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் திட்டத்தின் செயல்திறன் அதிகரித்திருப்பதை குறிப்பிட்டுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "கடந்த 21ஆம் தேதி வரை, 251.40 கிமீ தூரத்துக்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. 103.24 தூரத்துக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது" என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறிப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


 






கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட கட்டுமான பணிகள் தொடங்கியது. கட்டுமான பணிகள் தொடங்கி 6 மாதத்தில் 1 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது.


இந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 50 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது. வல்சாத் மாவட்டத்தில் பர் மற்றும் ஔரங்க, நவ்சாரி மாவட்டத்தில் பூர்ணா, மின்தோலா, அம்பிகா மற்றும் வெங்கனியா ஆகிய ஆறுகளின் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத் வரை 500 கிமீ தூரத்தில் 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புல்லட் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.