Hindu Marriage: இந்து திருமண சட்டம், 1955இன்படி சட்டப்பூர்வமாக பின்பற்ற வேண்டிய தேவைகள் மற்றும் பேணி பாதுகாக்க வேண்டிய புனித தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


இந்து திருமணம் குறித்து நீதிமன்றம் பரபரப்பு கருத்து:


தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணையின்போது, தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்து மனு தாக்கல் செய்ய ஒப்பு கொண்டனர்.


தங்களின் திருமணத்தில் முறையான பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எதுவும் பின்பற்றவில்லை. ஆனால், தேவை ஏற்பட்டதாலும் நெருக்கடி காரணமாகவும் பதிவு செய்யப்பட்ட வேத பொது நலக் குழுவிடம் திருமணம் நடந்ததாக சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அந்த சான்றிதழின் அடிப்படையில், உத்தரப் பிரதேச பதிவு விதி, 2017 இன் கீழ், திருமண பதிவு சான்றிதழை பெற முயன்றோம். இறுதியில், திருமணப் பதிவாளரால் திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது என கணவன், மனைவி சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.


"சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும்"


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு, "புனிதமான ஹோம குண்டத்தை சுற்றி ஏழு முறை வலம் வருவது உள்பட முறையான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றினால் மட்டுமே இந்து திருமணம் செல்லும்.


அப்படி செய்யவில்லை என்றால், அது இந்து திருமணமாக கருதப்படாது. சச்சரவுகள் ஏற்படும்போது இந்த சடங்குகள் நடந்ததற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் இந்து திருமணத்தை பதிவு செய்வது, திருமணத்திற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.


இந்து திருமண சட்டம், பிரிவு 7இன்படி, திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்றால் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படாது. முறையான சடங்குகளுடன் இந்து திருமணம் நடைபெறவில்லை என்றால் சட்டத்தின் 8வது பிரிவின் விதிகளின் கீழ் திருமணப் பதிவு அதிகாரி அத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது.


எனவே, தம்பதியினர் திருமணம் செய்து கொண்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டாலும் கூட, சட்டத்தின் 7-வது பிரிவின்படி திருமண விழா நடைபெறவில்லை என்றால், அத்தகைய திருமணத்தை பிரிவு 8-ன் கீழ் பதிவு செய்வது அத்தகைய திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரமும் அளிக்கப்படாது.


நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, திருமணப் பதிவாளரிடம் திருமணத்தைப் பதிவுசெய்து, அதன்பிறகு வழங்கப்படும் சான்றிதழானது, இருதரப்பினரும் இந்து திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தாது" என்றார்.