2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் ஹசன் தொகுதி எம்.பி., பிரஜ்வால் ரேவண்ணா வாய்மையே வெல்லும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


என்ன விவகாரம்?


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், தற்போதைய ஹசன் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவர் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும், பாஜக கூட்டணி சார்பில் ஹசன் தொகுதியில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். 






இந்த நிலையில் அவர் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படும் பல பெண்கள் இருக்கும், ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்த வீடியோக்கள் அடங்கிய ஏராளமான பென் ட்ரைவ்கள் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் மைதானம் போன்ற பல பொது இடங்களில் தூக்கி வீசப்பட்டு இருந்தன. 


சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு


விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து,பிரஜ்வல் ரேவண்ணா மாயமானார். அவர் ஜெர்மனிக்குத் தப்பியோடியதாகக் கூறப்பட்டது. அவர் மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையே கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இதற்கிடையே பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.


இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா வாய்மையே வெல்லும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், ’’பெங்களூருவில் நான் இல்லாததால், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடி போலீஸாரிடம் பேசியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.