Obscene Video Scandal: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


ஆபாச வீடியோ விவகாரம்:


சர்ச்சையை கிளப்பியுள்ள ஆபாச வீடியோக்களில் சில பெண் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என கர்நாடக பெண்கள் ஆணையம் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.


இந்த விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றிருப்பது பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க செய்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்ற ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிற்க வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.  


டெல்லிக்கு பறந்த கர்நாடக முதல்வரின் கடிதம்:


கர்நாடக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஹசன் மக்களவை  உறுப்பினரும் (எம்.பி.) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவால் எண்ணற்ற பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


இந்த கடுமையான வழக்கு பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஹசன் மக்களவை எம்.பி.யும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் பயங்கரமானவை. வெட்கக்கேடானது. இவை நாட்டின் மனசாட்சியை உலுக்கியது.


எங்கள் அரசாங்கம் 28/04/2024 அன்று குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. விசாரணையானது தொடங்கியுள்ளது. பல பெண்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றங்களின் உண்மைத் தன்மை வெளிப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகப் புகார் அளிக்க முன்வந்தவுடன், 28/04/2024 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன், சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.


பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பெண்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் நாட்டின் அவர் சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் வகையில், அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது மிகவும் முக்கியமானது.


இது சம்பந்தமாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.


சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ள தலைமறைவான நாடாளுமன்ற உறுப்பினர் விரைவாகத் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வு குழு தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கும். இது தொடர்பாக தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என குறிப்பிட்டுள்ளார்.