டெல்லி கலால் வரிக் கொள்கையில் ஊழல் செய்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இப்போது, கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாக கூறி அவர் தாக்கல் செய்த மனுவை அமலாக்கத்துறை எதிர்த்து வாதம் செய்தது. 


உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின்போது நடந்தது என்ன..? 


மின்னணு ஆதாரங்களை அழித்து, ஹவாலா மூலம் ரூ. 100 கோடி அனுப்பியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.  அப்போது கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், “100 கோடி ரூபாய் குற்றத்தின் மூலம் கிடைத்தது என்று கூறுகிறீர்கள். ஆனால், இந்த ஊழலின் மூலம் ரூ. 1,100 கோடி என்று கூறப்படுகிறது. ஏன்..? என்று கேள்வி எழுப்பியது. 


இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவிக்கையில், “தவறான வழிகளில் மொத்த வியாபாரிகள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்ப காலக்கட்டத்தில் கெஜ்ரிவால் எங்களது விசாரணையின் வட்டத்தில் இல்லை. ஆனால், விசாரணையில் அவரது பெயரும் அடிப்பட்டது. கெஜ்ரிவாலை குறிவைத்து சாட்சிகளை நாங்கள் உருவாக்குகிறோம் என்று கூறுவது தவறு. பிரிவு 164ன் கீழ் நீதிபதிகள் முன்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை நீங்கள் பார்க்கலாம். ” என்று தெரிவித்தது. 


தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “நீங்கள் அனைத்து விவரங்களை பதிவு செய்து ஒரு வழக்கு டைரியாக பராமரித்திருக்க வேண்டும். நாங்களும் அதையே விரும்புகிறோம்.


எங்களிடம் சில கேள்விகள் உள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது PMLA பிரிவு 19 சரியாக பின்பற்றப்பட்டதா என்பதுதான் அது. இந்த வழக்கு தொடர்பாக முதல் கைதுக்கு பிறகு கெஜ்ரிவாலை கைது செய்ய 2 ஆண்டுகள் ஆனது சரியாக தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியது. 


கெஜ்ரிவால் ரூ. 100 கோடி கேட்டார் - அமலாக்கத்துறை:


அமலாக்கத்துறை அளித்த விளக்கத்தில், “கெஜ்ரிவாலே ரூ.100 கோடி கேட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. கோவா தேர்தலின் போது அவர் தங்கியிருந்த 7 ஸ்டார் ஹோட்டல் ஹயாட்டின் பில் தொகையை சாரியட் எண்டர்பிரைசஸ் செலுத்தியதற்கான ஆதாரமும் உள்ளது.” என்றது. 


தொடர்ந்து விவாதத்தித்த அமலாக்கத்துறை, “ சட்டத்தின் பார்வையில் தலைவரோ, சாதாரண குடிமகனோ அனைவரும் ஒன்றே. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியும், 6 மாதங்கள் ஆஜராகாமல் தவிர்த்துள்ளார்.” என்று தெரிவித்தது. 


அப்போது, “இன்றைய தினமே அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முடித்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரை கைது செய்திருக்க மாட்டோம். அனைத்து தரப்பினரும் சமம்” என்று அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். 


அந்த நேரத்தில் குறிக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. கெஜ்ரிவால் வாதங்களை முன்வைக்க 3 நாள்கள் அனுமதி தந்ததால், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதி தரவேண்டும். 2 நாட்கள்தான் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.” என்று தெரிவித்தார்.