குஜராத் ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தாஹோத் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி வன்ஷிபென் மனிஷிபாய்.
சமீபத்தில், வன்ஷிபென் படித்து வரும் ஆரம்பப் பள்ளியில் மொழிப்பாடம் உள்ளிட்ட 6 பாடங்களுக்கு நடந்த முதன்மைத் தேர்வு முடிவு வெளியானது. அதில், குஜராத்தி பாடத்தில் 200க்கு 211 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக மதிப்பெண் சான்று வெளியானது.
இதையடுத்து, இந்த மதிப்பெண்களை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த வன்ஷிபென் தனது குடும்பத்தினருடன் ஓடிபோய் தனது ரிசல்ட் குறித்து தெரிவித்துள்ளார். முதலில் மகிழ்ச்சியில் திழைத்த குடும்பத்தினர், இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
அதற்குள், 4ம் வகுப்பு மாணவி வன்ஷிபென் இரு பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் பெற்ற தகவல் பரவியதை தொடர்ந்து சர்ச்சையானது. இதையடுத்து, விசாரணையில் மதிப்பெண் சான்றிதழில் பிழை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, குஜராத்தியில் 200க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200க்கு 190 மதிப்பெண்களும் வழங்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுத்தாள் வெளியிடப்பட்டது. அதே சமயம் மற்ற பாடங்களின் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை.
பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட புதிய ரிசல்ட்டில் வன்ஷிபென் 1000க்கு 934 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன் எதிரொலியாக, மாவட்ட கல்வி அதிகாரிகள், பிழையின் மூல காரணத்தை கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதிய மாணவர்கள்:
முன்னதாக, உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்லூரித் தேர்வின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு சில மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்களை தேர்வுதாளில் எழுதி வைத்திருந்தனர். அதற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது..?
வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்களும் முறைகேடுகளில் சிக்கினர். மாணவர் தலைவர் திவ்யன்ஷு சிங், சில பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஒரு சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெற செய்ததாக கூறி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்ததில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் மதிப்பெண்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, புகார்தாரர் பல மாணவர்களின் தேர்வு நகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்தார். அதில் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'ஜெய் ஹனுமான்' போன்ற வாசகங்கள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் விடைத்தாளில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவர்களின் புகாரை அடுத்து வெளி தேர்வர்களால் தேர்வு நகல்களை மறுமதிப்பீடு செய்தபோது பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர், தேர்வுக் குழுவினருடன் துணைவேந்தர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் மத்தியில், பி பார்மா துறையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.