டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களை விரைவில் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது  I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரது தரப்பில் ஜாமீன் வழங்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் மக்களவைத் தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக வரும் செவ்வாய்கிழமை அதாவது மே 7ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஜாமீன் தொடர்பான விசாரணையை திங்கள்கிழமை அதாவது மே 6ஆம் தேதியே நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 


கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால்


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துவராத அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாளே அமலாக்கத்துறையால் காவலில் எடுக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 


அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், காவலில் எடுக்க விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 






இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சமர்பித்த சாட்சியங்களின் அடிப்படையில் அவர் முறைகேடு செய்ததும் அதன்மூலம் பெற்ற பணத்தை கோவா தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளார் எனவும் கூறியது. 


இதையடுத்து தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் முறையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பின் வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.