சட்டப்படி செல்லாத திருமணம் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்களுக்கு அவர்கள் உரிமை கோரலாம் என கூறியுள்ளது.
சட்டப்படி செல்லாத திருமணங்கள்:
கடந்த 2010ஆம் ஆண்டு, வழக்கு ஒன்றில், இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் சொத்துக்களைப் பெறுவதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மூதாதையர் சொத்தை பெறுவதற்கு இத்தகைய குழந்தைகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கில், சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்திலும் சரி, பெற்றோர் சொத்திலும் சரி, உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் வேறு விதமான தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு:
இந்த விவகாரம் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், "சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்கள், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வழியாக பிறக்கும் குழந்தைகள், பெற்றோரின் மூதாதையர் சொத்தில் உரிமை கோரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் (HMA) பிரிவு 16(1) மற்றும் பிரிவு 16(2) இன் கீழ் வரும் குழந்தை, இந்து வாரிசுச் சட்டத்தின் (HSA) கீழ் சட்டப்பூர்வ குழந்தையாக கருதப்படும் என உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து திருமணச் சட்டம் சொல்வது என்ன?
இந்து திருமண சட்டப்பிரிவு 16(1) மற்றும் (2) இன் கீழ் வரும் குழந்தைக்கு அவர்களின் பெற்றோரின் சொத்தில் உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காக இந்து வாரிசு சட்டத்திற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.