இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.


கடந்த மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாக்குப்பதிவு நடக்கும் நாளில் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மொய்ராங் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.


இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் இருக்கும் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா, கேரளா மாநிலம் ஆழப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து அமராவதியில் பேரணி மேற்கொள்கிறார்.