ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஞானவாபி மசூதியின் தெற்கு அறையில், இந்துக்கள் தெய்வ வழிபாடு நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஞானவாபி மசூதி:
உத்தரபிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஆய்வறிக்கை வெளியானது.
இந்து கோயில்:
அறிக்கையில், ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறப்பட்டது. இதற்கிடையே, மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை மீண்டும் கட்ட அனுமதிக்க வேண்டும் என இந்து தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் ஞானவாபி மசூதியின் தெற்கு அறையில், இந்துக்கள் தெய்வ வழிபாடு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்துக்கள் பூஜை' தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி குழுவின் மேல்முறையீட்டின் மீது இந்து தரப்பினர் தொடுத்த வழக்குக்கும் சேர்த்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.