பாஜக ஆட்சியில் நாட்டின் அரசமைப்புத் தலைவரையே சாதி, பாலினப் பாகுபாடு தொடர்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 


பாரத ரத்னா விருது


அந்த வகையில், மறைந்த பிஹார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், விருதாளர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து எல்.கே.அத்வானியின் வீட்டுக்கே நேரில் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் பிரதமர் மோடியும் நேற்று விருதை வழங்கினார்.


நின்று கொண்டிருந்த குடியரசுத் தலைவர்


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றில், மோடி, அத்வானிக்கு அருகில் முர்மு நின்று கொண்டிருந்தார். அவர்களின் இருவரின் அருகில் நாற்காலி காலியாக இருந்தும் அவர் அமரவில்லை. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.


இதுகுறித்துத் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பாஜக ஆட்சியின் கீழ், நமது நாட்டின் அரசியலமைப்புத் தலைவரையே கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஓர் அப்பட்டமான சான்றாக விளங்குகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.  






எனினும் இதற்கு பாஜக ஆதரவாளர்கள், சற்றே தள்ளி இருந்த நாற்காலியில் முர்மு அமர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.


ஆனாலும் அருகில் இருந்த நாற்காலியில் அமராமல், தள்ளி அமர வைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்று மேலும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.