பட்டியலின சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் மீண்டும் அதிரடி: பட்டியலின சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது.


இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பீலா திரிவேதி, கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பீலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.


தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் நான்கு பேர், "பட்டியலின சமூகத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு வரம்பில் இருந்து முற்பட்டவர்களை விலக்க வேண்டியதன் அவசியத்தை" எடுத்துரைத்தனர். அவர்களை அடையாளம் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


 






இந்த தீர்ப்பை எதிர்த்து விசிக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி காட்டியுள்ளது.


"மறுசீராய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், எந்தப் பிழையும் இல்லை. உச்ச நீதிமன்ற விதிகள் 2013இன் ஆணை XLVII விதி 1 இன் கீழ் மறுஆய்வு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?