ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் இன்று (அக்டோபர் 4, 2024) பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா ஏற்பாடு செய்திருந்த 'தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான ஆன்மீகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.


நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஆன்மீகம் என்பது மதமாக இருப்பதோ அல்லது சாதாரண வாழ்க்கைமுறையை கைவிடுவதோ அல்ல என்று கூறினார். ஆன்மீகம் என்பது உள்ளே இருக்கும் சக்தியை அங்கீகரித்து நடத்தையிலும் எண்ணங்களிலும் தூய்மையைக் கொண்டுவருவதாகும் என அவர் தெரிவித்தார்.


ஆன்மீகம் என்றால் என்ன?


எண்ணங்கள், செயல்களில் தூய்மை என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சமநிலையையும் அமைதியையும் கொண்டுவருவதற்கான வழியாகும் என்று அவர் தெரிவித்தார். ஆரோக்கியமான, தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது அவசியமாகும் என அவர் கூறினார்.


ஆன்மீகம் என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு வழி மட்டுமல்ல என்றும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவும் அது உள்ளது எனவும் குடியரசுத்தலைவர் கூறினார்.


நமது உள்ளார்ந்த தூய்மையை நாம் அடையாளம் காண முடிந்தால் மட்டுமே ஆரோக்கியமான, அமைதியான சமுதாயத்தை நிறுவுவதற்கு நம்மால் பங்களிக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 


"கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வாழ்நாள் முழுவதும் உதவும்"


முன்னதாக, நேற்று உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வரும் தருணம் இது என்று கூறினார்.


"மாணவ உணர்வை" எப்போதும் பராமரிக்க வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ச்சியான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் லட்சியங்களையும், சமூக உணர்வையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.


உணர்திறன் என்பது ஒரு இயற்கையான குணம் என்று அவர் கூறினார். சுற்றுப்புறம், கல்வி, விழுமியங்கள் ஆகிய காரணங்களால் சிலர் கண்மூடித்தனமான சுயநலத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஒருவரின் நலனை எளிதாக அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.