திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 549 புறப்படும் போது திடீரென புகைப்பிடித்ததால் புறப்படுவதற்கு தாமதமானது.
திடீரென ஏற்பட்ட புகை:
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று காலை 8.39 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓடுபாதையில் புகை மூண்டதை அடுத்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த விமான நிலைய அதிகாரிகள், புகையின் மூலத்தை கண்டறிய சோதனை நடத்தி வருகின்றனர்.
விசாரணைகள் தொடர்வதால், காலை 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமானது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறொரு விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,"டேக்-ஆஃப் துவக்கத்தின் போது சந்தேகத்திற்கிடமாக புகை காணப்பட்டதால், எங்கள் விமானம் ஒன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தாமதம் ஏற்பட்டது.
எங்கள் பயணிகளின் பயணத்திற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையின் சரியான தன்மையை கண்டறிய விசாரணை நடத்தப்படும். எங்கள் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்." என்று கூறியுள்ளார்.