பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு முதுநிலை அடிப்படையில் பணியுயர்வில் இடஒதுக்கீடு ஏற்பாடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தமது முந்தைய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ள முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும், ஒட்டுமொத்த பணிநிலைப் பிரிவு (Group), சர்வீஸ் மற்றும் இதர வகைகளை (Class) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணியாளர்கள் (Cadre) மட்டத்திலான  தரவுகளைக் கொண்டு இடஒத்துக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது   


இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16(4)A ன் படி, அரசின் கருத்தில் (opinion of the State), அரசின் கீழுள்ள பணியங்களில் (appointment or posts) பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினர் போதிய அளவு பிரதிநித்துவம் செய்யப்படவில்லை என்று கருதினால், பணி உயர்வில் (in matters of Promition, with consequential seniority to any class) இடஒதுக்கீடு செய்யலாம்.   



      


இருப்பினும், கடந்த 2006-ஆம் ஆண்டு நாகராஜ் தொடர்ந்த வழக்கில் (எம்.நாகராஜ் v. ஒன்றிய அரசு (Union of India) உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டில் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அதில், முதலாவதாக, அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர் என்பதனை தரவுகள் கொண்டு நிறுவ வேண்டும்; இரண்டாவதாக, அரசின் கீழுள்ள பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி/எஸ்.டி பிர்வினரையும் சேர்த்து) வகுப்பினர் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதை அரசு நியாயப்படுத்த வேண்டும் (அதாவது, அரசின் கருத்தில் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது) ; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் கிரீமி லேயர் (Creamy Layer) கண்டிப்பாக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்; இடஒதுக்கீட்டு வசதியால் அரசின் நிர்வாகத் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது (அரசியலமைப்பு சரத்து 335); ஐம்பது சதவீதங்களுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தது 


இந்திய அரசியலில், நாகராஜ் வழக்கின் நிபந்தனைகள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. ஏனெனில், அரசியலமைப்பு பிரிவு 341-ன் கீழ்  குடியரசுத் தலைவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதிகளையோ, இனங்களையோ, பழங்குடிகளையோ பட்டியல் கண்ட சாதிகள் (எஸ்.சி) என்று பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம் (இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை). பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பின்பும், இடஒதுக்கீட்டில் மீண்டும் அரசு ஏன் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. 


மேலும், பட்டியலின் மக்கள் பொருளாதார மேம்பாடு என்பதைத்தாண்டி சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினரை உள்ளனர். எனவே, கிரீமிலேயர் என்ற பொருளாதார நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.  


இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நாகராஜ் வழக்கின் தீர்ப்புகளை மறுஆய்வு செய்த உச்சநீதிமன்றம் (Jarnail Singh vs Lachhmi Narain Gupta and others), இடஒதீக்கீடு முறையில், பட்டியலின/ பழங்குடியின மக்கள்  முதலில்  பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர் என்பதனை தரவுகள் கொண்டு நிறுவத் தேவையில்லை என்று தெரிவித்தது. இருப்பினும், அரசின் கீழுள்ள பணியங்களில் பணி உயர்வு இடஒதுக்கீட்டு முறையில் பட்டியலின்/ பழங்குடியின பிரிவினர் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதை நிறுவ வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 




இந்நிலையில், எது முறையான தரவுகள் என்றும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிபதிகள் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தனர்.


பணி உயர்வில் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்களுக்கு  இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எம். நாகராஜ் vs ஒன்றிய அரசு, ஜர்னாயில் சிங் மற்றும் பலர், ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட நிபந்தனைகள விலக்கிக்கொள்ள முடியாது. முறையான தரவுகள் மூலம் அரசு நிறுவனங்களில் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதனை நிறுவவேண்டும். 


எது முறையான தரவுகள் என்று கேள்விக்குப் பதிலளித்த நீதிபதிகள், ஒட்டுமொத்த பணிநிலைப் பிரிவு (Group), சர்வீஸ் மற்றும் இதர வகைகளை (Class) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணியாளர்கள் (Cadre) மட்டத்திலான தரவுகளைக் கொண்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியாளர்கள் என்பதே  அடிப்படை அலகுகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.