பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 27 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் விவரத்தை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் பஞ்சாப் மாநில பாஜக அண்மையில் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதன்படி மேற்கு அமிர்தசரஸில் குமார் அமித் வால்மிகி, ஷாகோட்டில் நரேந்திர பால் சிங் ஷட்டி, ஜலந்தரில் சரப்ஜித் சிங் மக்கார், அனந்தபூர் சாகிப்பில் பர்மிந்தர் சர்மா, லூதியானா வடக்கில் பர்வீன் பன்சால்,ஆகியோர் அடங்கிய 27 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் 20 பிப்ரவரி அன்று நடைபெற உள்ளது. 10 மார்ச் அன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.காங்கிரஸ், பிஜேபி, ஆம் ஆத்மி, ஷிரோமணி அகலி தல், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. 






காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இருந்தாலும் கட்சிக்குள் நடந்த உட்கட்சி மோதல் அவர்களுக்கு எதிராக அமையும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். கூட்டுத் தலைமைக்குப் பதிலாக, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அறிவிக்க வேண்டும் எனப் பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் ராகுல் காந்தியிடம் பகிரங்கமாக கேட்கப்பட்டிருக்கிறது. 


பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில் மிக முக்கியமான இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வராகத் தேர்ந்தெடுக்குமா, சரஞ்சித் சிங் சன்னி மீண்டும் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பாரா என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்திள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த விவகாரத்தைப் பேசியுள்ளார். நவ்ஜோத் சிங் சித்து, சரஞ்சித் சிங் சன்னி ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று பிரசாரக் கூட்டத்தின் போது, சரஞ்சித் சிங் சன்னி நவ்ஜோத் சிங் சித்துவைக் கட்டியணைத்து தங்களுக்கு எந்த சண்டையும் இல்லை எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். `பலரும் எங்களுக்குள் சண்டை இருப்பதாகக் கூறி வருகின்றன. ராகுல் காந்தி அவர்களே, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்’ என ராகுல் காந்தி முன்னிலையில் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி.


அவரது காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா? 
பொறுத்திருந்து பார்ப்போம்.