ஆந்திர மாநிலம் நக்கபள்ளியில் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியின் தந்தை, மன உளைச்சலினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் பெற்ற மகள், உடன்பிறந்த சகோதரி, உறவினர் என எதையும் கண்டுக்கொள்ளாமல் நிகழும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக 2 வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக வருகிறது. இதுப்போன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது தொடர்பாக நடத்தப்பட்ட புள்ளி விபரங்களின் படி, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தடுக்க எத்தனையோ சட்டங்கள் இயற்றியும், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் இன்னும் மக்கள் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும்.
பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் சில குடும்பங்கள், இதனை எதிர்த்துப்போராடினாலும், சில குடும்பங்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அப்படியொரு சம்பவம் தான் ஆந்திர மாநிலம் நக்கபள்ளியில் நிகழ்ந்துள்ளது. நக்கபள்ளி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ராஜய்யபேட்டா கிராமத்தில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி 11 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் அடுப்பு எரிப்பதற்காக விறகு எடுக்கச்சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச்சேர்ந்த 22 வயதான ஜி. நாகேஷ் இளைஞர் ஒருவர், தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து சோகத்துடன் வீட்டிற்கு சென்ற சிறுமியிடம், என்ன நடந்தது? என பெற்றோர்கள் விசாரிக்கையில், நடந்ததையெல்லாம் கூறியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் ஜனவரி 21 ஆம் தேதி நக்கபள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்த அடுத்த நாளே சிறுமியின் தந்தை தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து நக்கபள்ளி காவல்நிலைய உதவி காவல்ஆய்வாளர் வெங்கண்ணா கூறுகையில், “தன்னுடைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியைக்கேட்ட நாள் முதல் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில்“ இருந்துள்ளனர். இதோடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்ததும் அனைவருக்கும் இச்சம்பவம் தெரியவந்துவிட்டது. இதனால் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக நினைத்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது இவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஆந்திர மாநிலம் நக்கபள்ளி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது பெற்றோர்கள் தான் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். ஒரு வேளை உங்களுக்கு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஏற்பட்டால், அரசு வழங்கியுள்ள 100 என்ற எண்ணிற்கு அழைத்து என்ன செய்யலாம்? என ஆலோசனைக் கேட்டுக்கொள்ளலாம் அல்லது 1098 என்ற எண்ணிற்கும் தொடர்புக் கொண்டு உதவிக்கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.