`சமூகத்திற்குப் பயனுள்ள நபராக மாறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று கூறி, கடந்த 2013ஆம் ஆண்டு நான்கு வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யூ.யூ.லலித், எஸ்.ரவிந்திர பட், பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கொலை வழக்கில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கில் அளிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும் குறைத்துள்ளது.
`நீதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படைகளை மேம்படுத்தி வரும் இந்த நீதிமன்றம், குற்றவாளிகள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யவும், சமூகத்திற்குப் பயனுள்ள நபராகவும் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காகவும் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது’ எனவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணையில், `குற்றவாளியின் குறைபாடுடைய உளவியலை மீண்டு சரிசெய்வதற்கு எப்போதுமே மரண தண்டனை பயன்படாது’ எனச் சுட்டிக்காட்டி இருந்தது.
மேலும் இந்த ஆணையில், `இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அந்தச் சிறுமி இந்தக் குற்றவாளியால் அழிக்கப்பட்டிருக்கிறார். மனிதர்களுள் மிகவும் கொடூரமான சம்பவங்களுள் ஒன்று இங்கே நிகழ்ந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி மீது காட்டப்படும் எந்தவொரு இரக்கமும் நீதியைச் சரிவர தெரிவிக்காததாக மாறிவிடும். இதுபோன்ற வழக்குகளை அபூர்வமானவையாக இந்த நீதிமன்றம் கருதியதில்லை’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது, உச்ச நீதிமன்றம் பிரபல ஆங்கிலக் கவிஞரான ஆஸ்கர் வைல்ட் எழுதிய பிரபல வாசகமான, `சந்நியாசிக்கும், பாவிக்கும் இடையிலான வேறுபாடு என்பது, ஒவ்வொரு சந்நியாசிக்கும் கடந்த காலம் இருக்கும்; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் இருக்கும் என்பதே’ என்பதைக் குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2013ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முகமது ஃபிரோஸ் என்பவர் நான்கு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, வயலில் தூக்கி எறிந்துள்ளார். மறுநாள் காலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவரைக் கண்டெடுத்து ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி இந்தச் சிறுமி உயிரிழந்தார்.
இந்த வழக்கின் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 5 வழக்குகளில் இதே போன்று பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக நீதிமன்றங்கள் குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.