உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் மகனை இழந்த தாயை அதிகாரி ஒருவர் அதட்டிய சம்பவம் கடும் கண்டனங்களை பெற்றுவருகிறது.
உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தான் அனுராக் பரத்வாஜ் என்ற சிறுவன். இச்சிறுவன் அண்மையில் சாலை விபத்தில் இறந்தான். விபத்திற்கான காரணமாக சிறுவன் பள்ளி வேனில் செல்லும்போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததே என்று பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், மாணவன் அனுராகின் பெற்றோர் மற்றும் உறவினர்களோ, சிறுவன் அனுராகுக்கு ஏதோ அசவுகரியமாக இருந்ததால் ஜன்னல் வழியாக வெளியே தலையை நீட்டியுள்ளான். அப்போது எதிரே இரும்புக் கம்பியில் தலை மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான். அவனது, நண்பர்கள் அனைவருமே அனுராக் தனக்கு ஏதோ மூச்சுமுட்டுவது போல் இருப்பதாகக் கூறியதாகவே சொல்கின்றனர். பள்ளி வேனில் இருந்த நடத்துநரின் அஜாக்கிரதையால் தான் எங்கள் குழந்தையின் உயிர் பிரிந்தது. அவர்கள் மட்டும் வேன் ஜன்னல் வழியாக சிறுவர்கள் தலையை வெளியில் விடாதவாறு கண்காணித்திருந்தார்கள் என்றால் விபத்து நடந்திருக்காது என்று கூறினர்.
தாயின் போராட்டம்:
விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவன் அனுராகின் (11) தாய் நேஹா பரத்வாஜ், பள்ளியின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று அவர் கோரினார். மகனைப் பிரிந்த சோகம் ஒருபுறம், கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதான கோபம் மறுபுறம் என அந்தப் பெண் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு, மோடிநகர் சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட் சுபாங்கி சுக்லா வந்தார். அவர் அனுராகின் தாயிடம் பேச முயன்றார். ஆனால், அவரோ அழுகையும் ஆவேசமுமாக இருந்தார். அப்போது ஆத்திரமடைந்த அதிகாரி, சிறுவன் அனுராகின் தாய் நேஹா பரத்வாஜைப் பார்த்து போதும்! வாயை மூடுங்கள் என்று கத்தினார். மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை கை நீட்டிக் கண்டித்து வாயை மூடவும், வாயை மூடவும் என்று அதட்டினார். ஆனால் அந்தத் தாயோ நீதி கோரி சற்றும் தளராத குரலில் பேசினார். இறந்தது உங்கள் மகனில்லையே, என் மகன் என்று தாய் கூற. ஆமாம், உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் எல்லாவற்றையும் விளக்க வந்துள்ளேன். ஆனால் நீங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் கத்துகிறீர்கள் என்றார். அதற்கு அந்த தாய் எனக்கு எல்லாம் புரிந்தது எனக் கூற, அதிகாரியோ அவரை விடாமல் அதட்டினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஷேம் ஆன் யூ சுபாங்கி என்று நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.