உச்சநீதிமன்றத்தில் வழக்கு:


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளானதோடு, கருப்பு பணம் என்பது ஒழிக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் குற்றம்சாட்டினர். இதனிடையே, மத்திய அரசின் பணமதிப்பிழப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட, 58 மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் கீழ் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. 


5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை:


ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை கடந்த டிசம்பர் 7ம் தேதி விசாரித்தது. அப்போது, பணமதிப்பிழப்பை செல்லாது என அறிவிப்பது கடிகாரத்தை மீண்டும் திருப்பும் முயற்சி” போன்றது எனவும்,  அந்த முடிவை மீண்டும் வாபஸ் பெற முடியாது என்றும் மத்திய அரசு தரப்பு வாதிட்டது. அதைதொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று வெளியிட்டனர்.






பணமதிப்பிழப்பு செல்லும்:


அந்த தீர்ப்பில், ”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கையை கொண்டு வருவதற்கு நியாயமான தொடர்பு இருந்துள்ளது.  மேலும் பணமதிப்பு நீக்கம் விகிதாச்சாரக் கோட்பாட்டால் பாதிக்கப்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரமான அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதனை கொள்கை முடிவாக எடுத்துள்ளது. பணமதிப்பு இழக்கத்தின் நோக்கம் எட்டப்பட்டாத என்பது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறவில்லை. எனவே, 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்க, நீதிபதி பி.வி.நாகரத்னா  மட்டும் பணமதிப்பிழப்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.