டெல்லி தல்கோடோரா அரங்கத்தில் `இந்து ராஷ்ட்ரம்’ அமைப்பதாகக் கூறி நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் வரும் மே 9 அன்று விசாரணை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அபய் ஒகா, சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்துள்ளது. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி கடந்த மே 5 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மனுதாரரிடம் காவல்துறையினரிடம் இந்த உத்தரவின் ஆணைகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ல நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிஷலனந்தா சரஸ்வதி என்ற சாமியார் பல்வேறு வெறுப்புப் பேச்சுகளை ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியவர். தொடர்ந்து தடை கோரப்பட்டும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் பொதுவெளியில் நடைபெறுவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, இவற்றில் பேசுவதைக் கண்டித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த மனு, இந்த வெறுப்புப் பேச்சுகளால் நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதையும் தெரிவித்துள்ளது.
இந்த மனுவில், `டெல்லியின் தல்கடோரா அரங்கத்தில் மே 5 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக மனுதாரர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அதில் பூரியின் சங்கராச்சாரியும், ஸ்ரீ கோவர்தன் மடத்தின் மஹந்த்துமான நிஷலனந்தா சரஸ்வதி கலந்து கொள்வார் எனவும் சுதர்ஷன் செய்தி சேனல் வெளியிட்டுள்ள இணைய தளப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போஸ்டரில் இந்த நிகழ்ச்சியின் போது பகிரங்கமாக இந்தியா இந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கப்பட்டு, அவ்வாறு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சுதர்ஷன் செய்தி சேனலின் சுரேஷ் சாவன்கே என்பவர் இந்துக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ இணைய தளங்களில் உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு நிகழ்ச்சிகள் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியதோடு அரசு தரப்பில் இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. வெறுப்புப் பேச்சுக்கான நிகழ்ச்சியை எதிர்த்து பத்திரிகையாளர் குர்பான் அலி, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருப்பதோடு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுகளைச் சுதந்திரமாகவும், நம்பிக்கை கொள்ளும் வகையிலும், நடுநிலையான வகையில் விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரு சமூகங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்துதல், தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்தல், பொது அமைதிக்குக் களங்கம் விளைவித்தல் முதலான பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.