சமீபத்தில் தன்னுடைய `தாகட்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ராஜஸ்தான் சென்றிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத், ராஜஸ்தான் மக்கள் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் அரசுகளை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் எனப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கங்கனாவுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் அமர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கங்கனா ரனௌத் அரசியல் கருத்துகளை மேடையில் இருந்து கூற, பார்வையாளர்கள் தரப்பில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. `ராஜஸ்தானைப் பொருத்த வரையில், இங்கு கலவரங்கள் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் அரசுகளைக் கொண்டு வாருங்கள். இல்லையெனில் நாங்கள் புல்டோசர்களை அனுப்புவோம்’ எனக் கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனௌத். 







இந்தியாவின் அரசியல் சூழலில் `கலவரம்’, `புல்டோசர்’ முதலான சொற்கள் அரசியல் தளத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், கங்கனாவின் இந்தக் கருத்து சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஈகைப் பெருநாளுக்கு முன்பு, ஜோத்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்கள் காரணமாக ஜெய்ப்பூரில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த மோதலில் சுமார் 211 ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்; 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்கனாவின் இந்தக் கருத்து ராஜஸ்தானின் ஆட்சி செய்து வரும் அஷோக் கெஹ்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை நேரடியாக விமர்சனம் செய்வதாகப் பார்க்கப்படுகிறது. 



மத்தியப் பிரதேசத்திலும், டெல்லி ஜஹாங்கிர்பூரியிலும் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி, அப்பாவி மக்களின் வீடுகள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ராஜஸ்தானின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என நடிகை கங்கனா தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 






சமீபத்தில் நடிகை கங்கனா ரனௌத் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அவருடனான படங்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கங்கனா, `சமீபத்திய தேர்தல்களில் மகராஜ் யோகி ஆதித்யநாத்ஜி வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து அவரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேண். அவருடைய கருணை மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவை என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன. நான் பெருமை கொள்வதோடு, அவரால் ஊக்கம் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.