இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் இருவர் இன்று பதவியேற்றுள்ளனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வேங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோருக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள்:
பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் நீதிபதிகள் உள்ளனர். தற்போது பதவியேற்றுள்ள பிரசாந்த குமார், விஸ்வநாதன் உள்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இவர்களை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று உத்தரவு வெளியிட்டார்.
பின்னர், இதுதொடர்பான அறிவிப்பை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார். இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இவர்களை நீதிபதிகளாக மே 16ஆம் தேதி பரிந்துரை செய்தது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர். ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, அவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் புதிதாக இரண்டு நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்திய தலைமை நீதிபதியாகும் தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன்:
உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலாவை தொடர்ந்து, வரும் 2030ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்திய தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் பதவியேற்க உள்ளார். வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இது 9ஆவது முறை.
அதேபோல, 4ஆவது முறையாக, நீதிபதியாக இருந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.
கடந்த 1966ஆம் ஆண்டு, மே 26ஆம் தேதி பிறந்த விஸ்வநாதன், கோவை சட்டக் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், 1988இல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்த பின்னர் 2009இல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு, குற்றவியல், வணிகம், திவால் மற்றும் நடுவர் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பரந்த அளவிலான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவி புரிந்துள்ளார்.
அதேபோல, நீதிபதி மிஸ்ரா, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு கொலீஜியம் மிஸ்ராவை நீதிபதியாக பரிந்துரை செய்தது.
நீதிபதி மிஸ்ரா, டிசம்பர் 10ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 13, 2021 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.