பீகாரில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய 65 லட்சத்திற்கும் மேற்பட்டோரை, மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் என்னென்ன.?

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களின் அடிப்படையில், பெயர் நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுபட்ட வாக்காளர்கள், ஆதார் அல்லது 11 ஆவணங்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரப்ப,  கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளபோதும், அதுகுறித்து அரசியல் கட்சிகள் வழக்கு தொடராதது ஆச்சரியமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதோடு, இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் 12 கட்சிகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் பேரை நீக்கிய தேர்தல் ஆணையம்

பீகாரில், சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில், பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் அவர்கள் இல்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயரை சேர்த்து இருப்பதாகவும், அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இது, நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, சர்ச்சையாகவும் வெடித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது.