தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கத் தடை விதித்தும் மூர்க்கத்தனமான நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continues below advertisement

டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் இருந்து தெருநாய்களை காப்பகங்களுக்கு மாற்றுவதை கட்டாயமாக்கும் முந்தைய உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

இந்த உத்தரவில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தெரிவித்தது என்ன தெரியுமா?

Continues below advertisement

டெல்லியில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்தும் தடுப்பூசி செலுத்தியும்விட்டு, அந்த நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தீர்ப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூர்க்கமான, ரேபிஸ் உள்ளிட்ட நோய்களைக் கொண்ட நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும். வெளியே விடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை

அதேபோல தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாகத் தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெரு நாய்களுக்கு உணவளிப்போர், அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை இடக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கென தனி இடங்களை உருவாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்கலாம்

மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது. தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாய்களைத் தத்தெடுக்க விரும்புவோர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும்? அதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

அதேபோல, நாய்க்கடி விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.