நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது.


"நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள்"


உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


வழக்கின் விசாரணை இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 


மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீதிமன்றம் ஒரு மிகவும் சிக்கலான விஷயத்தை கையாள்கிறது. இது ஆழ்ந்த சமூக தாக்கத்தை கொண்டுள்ளது. 


"விவாதம் தேவை"


உண்மையான கேள்வி என்னவென்றால், திருமணம் என்றால் என்ன, யாருக்கு இடையே நடக்க வேண்டும் என்பதுதான். சமூகத்திலும் மாநிலங்கள் இயற்றிய சட்டங்களிலும் இதனால் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவாதம் தேவைப்படுகிறது" என்றார்.


தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் உலகில் எங்காவது இருந்ததா? என நீதிபதி ரவீந்திர பட் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல், "எனக்கு தெரிந்த வரை இல்லை. ஆனால், தடையும் விதிக்கப்படவில்லை" என்றார். இங்கிலாந்தில் 1973 வரை தடை இருந்ததாக நீதிபதி ரவீந்திர பட் கூறினார்.


இதையடுத்து, தன்பாலின திருமணத்தை மற்ற நாடுகள் எவ்வாறு அங்கீகரித்தன என்பது குறித்து நீதிபதிகள் ஆராய்ந்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


முன்னதாக, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான வேற்று பாலினத்தவர் திருமணத்தையே சிறப்பு திருமண சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகள் அங்கீகரிக்கிறது" என மத்திய அரசு வாதம் முன்வைத்தது. 


இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "சமூகத்தில் இதனால் அதிகரிக்கும் மாற்றங்கள் குறித்து ஆராய்வதே சிறந்த வழயாக இருக்க முடியும். தனி சட்டங்களுக்கு உள்ளே செல்ல மாட்டோம். சிறப்பு திருமண சட்டத்திற்கு விரிவான விளக்கம் அளித்து அதனை பாலின நடுநிலைமையுடன் ஆக்க முடியுமா என்பது குறித்து ஆராய போகிறோம்" என தெரிவித்தது.