கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழர்களின் வாக்குகளை கவர பாஜக வியூகம் அமைத்து வருகிறது.


தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள்:


தமிழ்நாட்டை தாண்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. குறிப்பாக, 28 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மாநிலத் தலைநகரான பெங்களூருவில் அதிக தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனால்தான், கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதை  வழக்கமாக கொண்டுள்ளது அதிமுக.


ராஜாஜிநகர், காந்திநகர், காமராஜப்பேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர், சி.வி. ராமன் நகர் ஆகிய தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் கணிசமான இருப்பதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வாக்குகள் எவ்வளவு இருக்கிறது என்றால், அங்கு தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றிபெறும் அளவுக்கு உள்ளது. 


கடந்த 1983ஆம் ஆண்டு முதல், கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) சட்டப்பேரவை தொகுதியில் (பட்டியலிட் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது) மூன்று முறையும் (1983, 1989 மற்றும் 1999) மற்றும் காந்திநகர் தொகுதியில் (1994) ஒரு முறையும் அதிமுக வெற்றி பெற்றது. இந்த நான்கு முறையும் அதிமுக தனித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 2018ஆம் ஆண்டு, கேஜிஎஃப் தவிர ஹனூர் மற்றும் காந்திநகர் ஆகிய மூன்று இடங்களில் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியது. 1999ஆம் ஆண்டு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, பத்ராவதி உள்ளிட்ட 13 தொகுதிகளில் போட்டியிட்டது. 


ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் பாஜக:


இதன் தொடர்ச்சியாக, இம்முறையும் தேர்தலில் போட்டியிட போவதாக அதிமுக அறிவித்திருந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசிநகர் சட்டப்பேரவை தொகுதியில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நகர்வு, பாஜகவுக்கு பின்னடைவை தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதி வந்தனர்.


எனவே, பாஜக வகுத்த வியூகத்தின் ஒரு பகுதியாக அதிமுக தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பாஜகவின் கோரிக்கையை ஏற்று, வேட்பாளரின் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.


கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.