போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை இருப்பதாக சமூக வலைதளத்தில் ரெவன்ட் ஹமாட்சிங்கா என்ற நபர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்தியாவின் அபெக்ஸ் குழந்தை உரிமைகள் அமைப்பு, ஏப்ரல் 26 அன்று, Bournvita விற்கும் நிறுவனமான Mondelez இன்டர்நேஷனல் இந்தியா லிமிடெட்டிடம், பால் சப்ளிமெண்ட் தொடர்பான அனைத்து தவறான விளம்பரங்களையும், பேக்கேஜிங் மற்றும் லேபிள்களையும் மதிப்பாய்வு செய்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானம் 'போர்ன்விட்டா'. இதில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருக்கிறது என சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டது. மக்களிடையே இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், மாண்டலிஸ் இந்தியா நிறுவனம் ரெவன்ட் ஹமாட்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.  பதிவிட்ட வீடியோவையும் நீக்கிவிட்டார். ஆனாலும் பலர் அந்த வீடியோவை பார்த்துவிட்டதால், போர்ன்விட்டா தயாரிக்கும் நிறுவனம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  


தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், வெளியிட்ட புதிய அறிவிப்பில்,  இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் (FSSAI) லேபிளிங் மற்றும் காட்சி விதிமுறைகளின்படி,  சர்க்கரையின் மதிப்பு சேர்த்த பொருட்களுக்கு சிவப்பு வண்ணக் குறியீட்டைக் காட்ட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. 


"உங்கள் தயாரிப்பு, 'மால்டோடெக்ஸ்ட்ரின் திரவ குளுக்கோஸ்' என்ற லேபிள்களைப் பயன்படுத்தி வரம்பைத் தாண்டியதாகத் தெரிகிறது, இது "சர்க்கரை சேர்க்கப்பட்டது.." என்ற பிரிவிலான தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விதிமீறல்கள் குறித்த விரிவான விளக்கத்தையும், அதன் அறிவிப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு போர்ன்விட்டா நிறுவனத்திடம் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும், இந்த விவகாரத்தை உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கும் அனுப்பியுள்ளது.


மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் விளக்கம்


முன்னதாக, இது தொடர்பாக மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. "70 வருடங்களாக போர்ன்விட்டா இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. எங்களுடைய தயாரிப்பு தரமானது. எல்லா தரச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, முறையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ன்விட்டாவில் உள்ள உட்பொருள்கள் அனைத்தும் தர சான்றிதழ் பெற்றவை என்றும் அதில் வெளிப்படை தன்மை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் வெளியான வீடியோ மக்களிடம் நாங்கள் பெற்றிருந்த நம்பிக்கையை குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. தவறான தகவலால், எங்களுடைய நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.