கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. 


பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி:


குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வருகிறார்.


கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசும் குஜராத அரசும் பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


இந்த வழக்கு குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது ஏன்?


இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்விகளை எழுப்பியது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை பொறுத்தவரையில், குஜராத் அரசு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொண்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


"குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு எப்படி அவர்களை விடுவிக்க முடிந்தது? மற்ற கைதிகள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? இந்த வழக்கின் குற்றவாளிகளை தேர்வு செய்து ஏன் கொள்கை பலன் வழங்கப்பட்டுள்ளது?


14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு சீர்திருத்த வாய்ப்பளிக்கும் இந்த விதி மற்ற கைதிகளுக்கு எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது? இங்கு பின்பற்றுள்ள கொள்கை ஏன் இந்த வழக்கு குற்றவாளிகளுக்கு மட்டும்  பயன்படுத்தப்பட்டுள்ளது? சீர்திருத்தும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது? நமது சிறைகள் ஏன் நிரம்பி வழிகின்றன? எங்களுக்கு தரவு கொடுங்கள்" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


பில்கிஸ் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான பரிந்துரை வழங்கிய சிறை ஆலோசனைக் குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கோத்ரா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படாத நிலையில், அதன் கருத்து ஏன் கேட்கப்பட்டது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.